பெரியார் எனும் வாழ்வியல்

Poongodi Mathiarasu
2 min readMar 24, 2021
பெரியார்

‘‘சூரியன் வந்து போகும் இந்த வானத்தின் கீழே பெரியார் பேசாத பொருளில்லை. கடவுள்-மதம்- ஜாதி-ஆண்-பெண்-கல்வி-காதல்-இலக்கியம்-கலை-அறிவியல்-அரசியல்-உலகியல்-உளவியல்-இறந்தகாலம்-நிகழ்காலம்-எதிர்காலம்-ஜனனம்-மரணம் என்று அவர் தொடாத துறை இல்லை.

ஆனால், ஆதாரமும் ஆராய்ச்சியும் இல்லாமல் எந்தக் கருத்தையும் அவர் சொன்னதில்லை. அவர் மொழியில் அலங்காரமில்லை; ஆடம்பரம் இல்லை. சத்தியம் சவுக்காரம் போட்டு குளிக்க வேண்டியதில்லை. மனிதகுலத்தின் சமத்துவத்துக்காகப் பேராசைபட்ட துறவி அவர்”.

கவிஞர் வைரமுத்து ‘தமிழாற்றுப்படை’யில் தந்தை பெரியாரை தனது தமிழால் இவ்வாறு வரைந்து காட்டுவார்.

பெரியார் காற்றைப் போல, தண்ணீரைப் போல தமிழர்களுக்கு எப்போதும் தேவைப்படுகிறார் என்று அவர் முன்மொழிகிறார்.

90 வயதுக்கு மேல் நிறைவாழ்வு வாழ்ந்த பெரியார் மறைந்து 47 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இப்போதும் ஆர்எஸ்எஸ், பாஜகவினரின் தூக்கத்தைக் கெடுப்பவராக அந்தப் பெருங்கிழவன் இருக்கிறார். அவரை ஒருமுறையாவது திட்டாவிட்டால் அவர்களுக்கு அந்த நாள் விடிந்ததும், முடிந்ததும் கணக்கில் வராது. அந்த அளவுக்கு அவர் மீது அவதூறுகளையும் வெறுப்பில் தோய்ந்த விஷத்தையும் விதைத்துக் கொண்டே இருக்கின்றனர்.

பெரியார் என்கிற பேரரணை தகர்க்காவிட்டால் தமிழகத்தில் தாங்கள் இழந்த சனாதன சாம்ராஜ்யத்தை மீண்டும் அமைப்பது சாத்தியமில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

ஆனாலும், வெட்ட வெட்ட அவர் முளைத்துக் கொண்டே இருக்கிறார். அவர்களைப் பார்த்து முறைத்துக் கொண்டே இருக்கிறார்.

பெரியார் ஒரு தனித்துவமான சுய சிந்தனையாளர். அவரது எழுத்திலும் பேச்சிலும் அலங்காரம் ஆலவட்டம் போடாது. ஆனால், ஆழமான உண்மைகளும், அறிவூட்டும் சிந்தனையும் பொதிந்து கிடக்கும்.

தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அறிவை முன்னிறுத்தி இயங்கியவர் அவர். நான் சொல்வது உங்கள் அறிவு, ஆராய்ச்சி, புத்தி, அனுபவம் இவைகளுக்கு ஒத்து வராவிட்டால் தள்ளிவிடுங்கள்… ஒத்து வந்தால்காரியத்தில் கொஞ்சமாவது செய்ய முற்படுங்கள்…’ என்றுதான் அவர் கூறினார்.

அன்பு, அறிவு என்கிற இரண்டு தத்துவங்களுக்கு மாத்திரம் நான் ஆற்பட்டவன் என்றே அவர் கூறிவந்தார். அவரது அறிவு அசமத்துவத்தை ஒழித்து அன்பை நிலைநாட்டவே பயன்பட்டது.

சனாதன மதத்திற்கு எதிராக பெரியார் சமரசமற்ற சமர் நடத்தியதற்கு அடிப்படை காரணம் சாதி என்கிற கொடூர அமைப்பை அது பொத்தி வைத்து பாதுகாக்கிறது என்பதுதான். சாதி என்கிற அடுக்கு அமைப்பு முறை ஒரு சமூக அநீதி என்பது மட்டுமல்ல, உழைப்பை சுரண்டுவதை அது புனிதத்தின் பெயரால் நியாயப்படுத்துகிறது என்பதையும் பெரியார் இயங்கியல் அடிப்படையில் புரிந்து வைத்திருந்தார். அதனால்தான், தனது வாழ்நாள் முழுவதும் சாதியை ஒழிப்பதற்கு அவர் பாடுபட்டார்.

தீண்டாமையை நியாயப்படுத்தும் அனைத்து தத்துவங்களையும் எரிக்க வேண்டும் என்றார் பெரியார்

சாதிய முறையின் கொடுமையை விவரிக்கும் அவர்,“நாற்றமெடுத்த மலத்தைவிட மனிதன் கேவலப்படுத்தப்படுகிறான். இது உண்மை. வாய்ப் பேச்சுக்காக நான் சொல்லவேயில்லை, எப்படியென்றால், மல உபாதைக்குச் சென்றவன், அந்த பாகத்தை மட்டும் ஒரு சொம்பு தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்கிறான். மலத்தை காலில் மிதித்துவிட்டால், அந்தக் காலை மட்டும் தண்ணீரை விட்டு கழிவிவிட்டால் அந்தக் குற்றம் போய்விடுவதாக கருதப்படுகிறது.

ஒரு மனிதனை மற்றொரு மனிதன் தொட்டு விட்டால், அவனை தொட்டதால் ஏற்பட்ட தோஷம், தன்னுடைய உடலை உச்சி முதல் உள்ளங்கால் வரை குளிர, நனைய குளித்தாலொழிய போவதில்லை என்கிறார்கள். ஆகவே, மலத்தை விட மனிதன் எவ்வளவு கேவலமாக மதிக்கப்படுகிறான் என்பதை பாருங்கள்.

மனிதனை மனிதன் தொடுவதால் ஏற்படுகிற கெடுதல் என்ன? தோஷம் என்ன? குற்றம் என்ன? எதுவும் இல்லை” என்றுகூறும் பெரியார் சாதி வித்தியாசத்தை போக்க எல்லாவிதமான தியாகங்களையும் செய்வதற்கு முன்வர வேண்டும் என்று திருச்சியில் 1929 இல் நடந்த மாநாட்டில் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால், இன்னமும் சாதி இருக்கிறது. சாதியின் பெயரால் ஆணவப் படுகொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இன்றைக்கு நாட்டில், மதவெறி கொண்டவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்டம் போடுகிற நிலையில், சிறுபான்மை, தலித் மக்களையும், பெண்களையும் ஒடுக்குகிற நிலையில், இந்தி, சமஸ்கிருத மொழிகள் வம்படியாக திணிக்கப்படுகிற பொழுது, பெரும்பகுதி மக்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறபொழுது, மூட நம்பிக்கைகளை நியாயப்படுத்துகிற மூர்க்கர்கள் தைரியம் பெற்று பேசும் நிலையில், இதற்கெதிரான ஒன்றுபட்ட பெரும் போரில் பெரியாரின் பெரும் தொண்டும் கனல் கக்கும் சிந்தனைகளும் பெரிதும் பயன்படும் என்பது திண்ணம்.

--

--